சவூதி அரேபியாவில் உள்ள மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து சிறப்பித்த “உலக இஃப்தார்” (Iftar Around the World) நிகழ்ச்சி அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான இந்தப் பன்னாட்டு இஃப்தார் நிகழ்வு, பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்.
பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமம்:
இந்நிகழ்ச்சியில் 180-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். நோன்பு திறக்கும் இந்நிகழ்வில், மாணவர்கள் தங்களது தாய்நாட்டின் பாரம்பரிய ரமழான் உணவுகளைக் காட்சிப்படுத்தியதுடன், அனைவருடனும் அதனைப் பகிர்ந்து ஒன்றாக இஃப்தார் நோன்பைத் திறந்தனர். இதன் மூலம் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகள் சங்கமிக்கும் ஒரு சிறந்த தளமாக இந்நிகழ்வு அமைந்ததுடன், மாணவர்களிடையேயான பரஸ்பர புரிந்துணர்வும் நட்புறவும் மேலும் வலுப்பெற்றன.
பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு:
மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவர், பேராசிரியர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுடன் நோன்பு திறந்து கலந்துரையாடினர். “இத்தகைய முன்னெடுப்புகள் மாணவர்களின் கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் வெகுவாக ஊக்குவிக்கின்றன” என அவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
பாராட்டைப் பெற்ற முன்னெடுப்பு:
சர்வதேச மாணவர்களை ஒருங்கிணைக்கும் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம், பன்னாட்டு ஒற்றுமையை மேம்படுத்தும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்வதை இந்த “உலக இஃப்தார்” நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. பல தேசங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் பல்கலைக்கழகத்தின் இந்தச் சிறப்பான முன்னெடுப்பு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது.
ஏ.எம். அபான்
Add comment