✍️ ஏ. எம் அபான்
உலகளாவிய அரசியலும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள இன்றைய சூழலில், மிகவும் ஆச்சரியமானதும், வேதனைக்குரியதுமான ஒரு விடயம்—சவூதி அரேபியாவிலேயே வேலை செய்துகொண்டு, அந்த நாட்டின் வளங்களை அனுபவித்துக்கொண்டே அந்த நாட்டிற்கு எதிராகச் சிலர் முன்வைக்கும் கண்மூடித்தனமான விமர்சனங்களாகும்.இந்த முரண்பாடான யதார்த்தத்தை வெறும் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், யதார்த்தம், கடமை மற்றும் மனசாட்சியின் அடிப்படையில் விரிவாக அணுக வேண்டியது அவசியமாகும்.
சவூதி அரேபியா என்பது பல லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தாய்வீடு போன்றது. சவூதி அரேபியாவில் இன்று 246,139 இலங்கையர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது வெறும் ஒரு புள்ளிவிவரம் அல்ல. பல மில்லியன் மக்களுக்கு உணவளிக்கும் ஊதியம் அது. தங்கள் சொந்த நாடுகளில் வேலைவாய்ப்பின்றியும், வறுமையிலும் வாடிய பலருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களின் குடும்பங்களின் பசியைப் போக்கும் பூமி அது. தங்களின் பிள்ளைகளின் கல்விக்கும், சகோதரிகளின் திருமணத்திற்கும், பெற்றோரின் மருத்துவத்திற்கும் அங்குள்ளவர்களின் வியர்வையே மூலதனம். அத்தகைய மண்ணில் வேலை செய்துகொண்டு, அந்த நாட்டின் காற்றைச் சுவாசித்து, அந்த நாட்டின் உணவை உட்கொண்டே, அந்த நாட்டிற்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் எழுதுவதும், ஏளனம் செய்வதும் மிகப்பெரிய நகைச்சுவையாகும்.
சவூதி அரேபியா என்பது வெறும் தொழிலாளர்களின் புகலிடம் மட்டுமல்ல, அது பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் புனித பூமியும் கூட.மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம், மன்னர் சவூத் பல்கலைக்கழகம் எனப் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்கள் முழுமையான கல்வி உதவித்தொகையுடன் (Scholarship) பயின்று வருகிறார்கள். தங்குமிடம், உணவு, மருத்துவம் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு, அவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குச் சவூதி அரசு உரமிடுகிறது. உணர்ச்சிவசப்பட்டு சவூதி ஒரு போரில் குதித்திருந்தால், இந்த மாணவர்களின் கல்வி பாதியிலேயே கருகியிருக்கும்.
சவூதியின் அமைதியைக் “கோழைத்தனம்” என்று விமர்சிக்கும் பலர், அந்த நாடு போர்க்களமாக மாறினால் முதலில் பாதிக்கப்படப் போவது தாங்களே என்பதை உணர்வதில்லை. போர் வெடித்தால், தஞ்சம் புகுவதற்குக் கூட வழியின்றி அதே பாலைவனத்தில் அகதிகளாக நிற்க வேண்டிய நிலைதான் ஏற்படும். எந்த நாடு தங்களுக்கு வாழ்வாதாரம் அளித்ததோ, அந்த நாட்டின் தலைமைத்துவத்தையும் முடிவுகளையும் இக்கட்டான சூழலில் விமர்சிப்பது அழகில்லை. ஒரு நெருக்கடியான நிலையில், தன் நாட்டின் வளங்களையும், தன் மண்ணில் வாழும் வெளிநாட்டவர்களையும் காக்க ஒரு தலைமை எடுக்கும் விவேகமான முடிவுக்குத் துணையாக நிற்பதே உண்மையான விசுவாசமாகும்.
🔴 தனிப்பட்ட முரண்பாடுகளும், ஒட்டுமொத்த தேசத்தின் மீதான விமர்சனமும்
சமீபகாலமாகச் சவூதி அரேபியாவில் ஏற்படும் சில சமூக மற்றும் கலாச்சார மாற்றங்கள் குறித்துப் பலருக்கும் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஒரு நாட்டின் உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கான விமர்சனங்களை நாகரிகமான முறையில் முன்வைப்பதில் தவறில்லை.ஆனால், அந்தச் சில தனிப்பட்ட மாற்றுக்கருத்துக்களுக்காக, ஒட்டுமொத்த சவூதி தேசத்தையும் விமர்சிப்பது, அதன் மாபெரும் மனிதாபிமானப் பணிகளை இருட்டடிப்பு செய்வது, மற்றும் அந்த நாட்டிற்கு அழிவு வர வேண்டும் என்று ஆசைகொள்வது எந்த வகையிலும் அழகில்லை; அது அறிவுடைமையுமல்ல. ஒரு சில குறைகளுக்காக, ஒட்டுமொத்த தேசத்தின் நன்மைகளையும் நிராகரிப்பது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடேயன்றி வேறில்லை.
🔴 பாலஸ்தீன விவகாரம்: உணர்ச்சிகளும் யதார்த்தமான கடமைகளும்
இன்று சவூதி அரேபியாவின் மீது முன்வைக்கப்படும் மிகப் பிரதானமான விமர்சனம்: “காஸா மக்களுக்காகச் சவூதி ஏன் போரில் இறங்கவில்லை?” என்பதுதான்.இஸ்லாமிய அடிப்படையில், ஒரு முஸ்லிம் துன்பப்படும்போது, இயலுமை இருந்தால் கட்டாயம் அவர்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் கடமைதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இஸ்லாமிய ஆட்சியியலின் (Islamic Governance) அடிப்படை விதிகளின்படி, ஒரு நாட்டின் தலைமைக்கு முதல் மற்றும் பிரதான கடமை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தனது சொந்த நாட்டு மக்களையும், தம்மை நம்பி வேலைக்காக வந்திருக்கின்ற பல லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் பாதுகாப்பதாகும்.வேறொரு தேசத்தின் பிரச்சினையைத் தீர்க்கப் போய், தனது தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவது தலைசிறந்த ராஜதந்திரம் ஆகாது. உணர்ச்சிவசப்பட்டு சவூதி ஒருவேளை போரில் இறங்கினால், உள்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களுக்கும், பொருளாதாரத்திற்கும் யார் பொறுப்பேற்பது? தன்னைப் பாதுகாத்துக்கொண்டு, தூதரக ரீதியாகவும், மனிதாபிமான உதவிகள் (Humanitarian Aid) மூலமாகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதே தற்போதைய சூழலில் சாத்தியமானதும், சரியானதுமான நிலைப்பாடாகும். அதைத்தான் சவூதி அரேபியா செய்து கொண்டிருக்கிறது.
🔴 பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை (Shifting the Burden)
பலரின் மனநிலை எப்படி இருக்கிறதென்றால், “பாலஸ்தீன மக்களைப் பாதுகாப்பது சவூதி அரேபியாவின் கடமை மட்டுமே” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மாபெரும் முட்டாள்தனம்.உலகின் எந்த மூலையில் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும், அதற்காகக் குரல் கொடுப்பதும், உதவுவதும் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தின் கடமையாகும். சவூதி அரேபியா என்ற ஒரு தனிப்பட்ட நாட்டின் மீது மட்டும் முழுப் பழியையும் சுமத்திவிட்டு, நாம் நமது பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.
🔴 மனசாட்சியை நோக்கிய சில கேள்விகள்
சவூதி அரேபியாவைக் கடுமையாக விமர்சிப்பவர்கள், தங்களின் சொந்த மனசாட்சியிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பார்ப்பது அவசியம்:
1)காஸா மக்களுக்காக சவூதியை விமர்சிக்கும் நாம், அவர்களுக்காகப் பிரத்தியேகமாக என்ன செய்திருக்கிறோம்?
2) நமது பொருளாதாரத்தின் ஒரு சிறு பகுதியையாவது அவர்களின் துயர்துடைப்புக்காக (Charity) வழங்கியிருக்கிறோமா?
3) எந்தவிதப் பகட்டும் இன்றி, இரவின் நிசப்தத்தில் அல்லாஹ்விடம் அவர்களுக்காகக் குறைந்தபட்சம் ஆத்மார்த்தமான ஒரு துஆவாவது (பிரார்த்தனை) கேட்டிருக்கிறோமா?
4) அநீதிக்குத் துணைபோகும் நிறுவனங்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் (Boycott) சிறிய தியாகத்தையாவது நாம் முழுமையாகச் செய்திருக்கிறோமா?
இவை எதையுமே செய்யாமல், வெறும் விமர்சனங்களை மட்டும் வீசுவது என்பது எப்படி ஞாயமாகும்?
இந்த ஆக்கம் உங்களை ஒரு வீதமாவது மாற்றும் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரினதும் மனசாட்சிக்கு இதனை விட்டுவிடுகிறேன்.
Add comment