சில மனிதர்களைப் பற்றிப் பேசும்போது வார்த்தைகளை விட உணர்வுகளே முந்திக்கொள்கின்றன.
✍️ ஏ.எம் அபான்
இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான உறவை நான் வெறும் வரைபடத்தில் உள்ள இரண்டு நாடுகளின் அரசியல் பந்தமாக ஒருபோதும் பார்த்ததில்லை. அது பல தசாப்தங்களாக பரஸ்பர அன்பாலும், ஆழமான மரியாதையாலும், சமய நம்பிக்கையாலும் பின்னப்பட்ட ஒரு உணர்வுபூர்வமான உறவு. இந்த உறவுக்கு இன்று தோழனாக, உயிருள்ள பாலமாகத் திகழ்பவர்தான் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் மேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி அவர்கள்.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி, இலங்கைக்கான முழு அதிகாரமுடைய தூதுவராக அவர் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த அந்த நாள், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் ஒரு பொன்னான அத்தியாயத்தின் தொடக்கம் என்றுதான் கூறவேண்டும்.
King Saud University இல் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், ரியாத் Institute of Diplomatic Studies பல்கலைக்கழகத்தில் Diplomatic Studies துறையில் முதுகலைப் பட்டமும், எகிப்தின் அலெக்ஸாண்டிரியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் மேலதிகமாக ஒரு முதுகலைப் பட்டமும் பெற்று, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் ஆழமான தேர்ச்சியும் கொண்ட ஒரு தலைசிறந்த ஆற்றல் கொண்டவர் என நான் வாசித்திருக்கிறேன். ஆனால், இந்த உயரிய கல்வித் தகைமைகளையெல்லாம் தாண்டி, அவரிடம் நான் காணும் ஆகச்சிறந்த தகுதி அவரது ‘மனிதநேயம்’ தான். இந்த ஆழமான கல்வியறிவுதான் அவரை வெறும் காரியாலயங்களோடு சுருக்கிவிடாமல், மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் ஒரு உன்னத ராஜதந்திரியாக அவரை செதுக்கியுள்ளது என நினைக்கிறேன்.
தூதுவரோடு எனக்கு தொடர்புகள் இருந்தாலும் நான் இதுவரை அவர்களை நேரடியாகச் சந்தித்ததில்லை. ஆனால், அவரைச் நேரில் சந்தித்த பலரும், அதிகாரத் தோரணை சிறிதும் இன்றி அவர் காட்டும் அன்பான, எளிமையான அணுகுமுறையைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒரு நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒருவரைப் பற்றிச் சாமானிய மக்கள் கூட இவ்வளவு நெருக்கமாக உணர்ந்து சொல்வது சாதாரண விடயமல்ல. இன்ஷா அல்லாஹ், அப்படி நேரடியாக சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அவருடனான எனது நேரடி அனுபவத்தை இன்னொரு சுவாரஸ்யமான ஆக்கத்தில் கட்டாயம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
நமது நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த அந்த இருண்ட நாட்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. எத்தனையோ குடும்பங்கள் அடுத்த வேளை உணவுக்கு வழியின்றித் தவித்ததை நாம் எமது கண்களால் கண்டோம். அந்த நேரத்தில், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று அரவணைத்த சவூதி அரேபியாவின் பேரன்பை மறக்க முடியாது. குறிப்பாக, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) ஊடாக தூதுவர் காலித் பின் அல்கஹ்தானி அவர்கள் முன்னின்று வழங்கிய உதவிகள் அளப்பரியவை.
சென்ற வருடங்களைப் போன்று இம்முறையும் ரமலான் காலத்தில் 50 டன் பேரீச்சம்பழங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டதும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களும் அன்போடுகலந்த கடமையின் வெளிப்பாடாகும் உயிர்காக்கும் சுகாதாரப் பங்களிப்பும், இருண்ட விழிகளுக்கு ஒளியேற்றிய ‘சவூதி நூர்’ திட்டமும்,சுகாதாரத் துறையில் நாம் சந்தித்த மாபெரும் சவால்களின் போது, ஒரு தாயின் பரிவோடு அவர் நீட்டிய கரங்கள் மறக்க முடியாதவை.
மருத்துவமனைகளில் அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவிய போது, சவூதி அரேபியாவின் உதவியோடு அவற்றை உடனுக்குடன் பெற்றுத்தந்து எத்தனையோ உயிர்களைக் காப்பாற்ற அவர் துணைநின்றார். இதையெல்லாம் விட மிகவும் நெகிழச் செய்கின்ற ஒரு விடயம்தான் ‘சவூதி நூர்’ (Saudi Noor / Ibsar) திட்டம். கண் பார்வை மங்கி இருளில் வாழ்ந்த எத்தனையோ ஏழை எளிய மக்களுக்கு, இலவசமாகக் கண் புரை சத்திர சிகிச்சைகளை (Cataract surgeries) மேற்கொண்டு, அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றிய உன்னதப் பணி அது. பண வசதியின்றிப் பார்வையை இழக்கும் தறுவாயில் இருக்கின்ற ஒருவர், இந்தச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது அன்புக்குரியவர்களை பார்க்கும் போது அவர் கண்களில் வழியும் அந்த ஆனந்தக் கண்ணீருக்கு இணையான கைம்மாறு இவ்வுலகில் என்னதான் இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது. இந்த மாபெரும் மனிதநேயத்திற்குப் பின்னால் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானியின் அயராத முயற்சி இருப்பதை நினைக்கும் போது இதயம் நெகிழ்கிறது.
எமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் அவரது வியத்தகு முயற்சிகள் எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. உண்மையான உதவி என்பது “மீன் கொடுப்பது மட்டுமல்ல, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதும் தான்” என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால் தான், விவசாயம், உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் சவூதி முதலீட்டாளர்களை இலங்கையை நோக்கி ஈர்ப்பதில் அவர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அவர் சவூதி அரேபியாவின் தூதுவராக மட்டும் இங்கு செயல்படாமல் சவூதி அரேபியாவில் இலங்கையின் பெருமையைச் சொல்லும் ஒரு தூதுவராகவும் அவர் செயல்படுகிறார் என்பதுதான். இலங்கையின் இயற்கை அழகையும், இது ஒரு பாதுகாப்பான மற்றும் சிறப்பான சுற்றுலாத் தலம் என்பதையும் சவூதி மக்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை இங்கு சுற்றுலா வர அவர் பெருமளவில் ஊக்குவிக்கிறார். இதன் விளைவாக, அண்மைக் காலங்களில் சவூதி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, சரிந்திருந்த நமது சுற்றுலாத்துறை மீண்டும் துளிர்க்கவும், நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணி கிடைக்கவும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.வேர்விடும் சமூகத் தொண்டும், அரவணைக்கும் வேலைவாய்ப்பும் வெறும் அரச மட்டத்திலான தொடர்புகளோடு மட்டும் நின்றுவிடாமல், இலங்கையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து அவர் பணியாற்றும் விதம் மிகவும் போற்றுதலுக்குரியது. அடிமட்ட மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, உதவிகள் நேரடியாக அவர்களைச் சென்றடைவதை அவர் உறுதி செய்கிறார்.
அதேபோல, வேலைவாய்ப்புத் துறையிலும் அவர் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது. இன்று சவூதி அரேபியாவில் மட்டும் சுமார் இரண்டரை இலட்சம் இலங்கையர்கள் பணிபுரிகிறார்கள். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான நமது இளைஞர்களுக்கும், குடும்பத் தலைவர்களுக்கும் சவூதியின் கதவுகள் அகலத் திறக்கப்பட்டன. அங்கிருந்து வரும் ஒவ்வொரு ரியாலுக்குப் பின்னாலும் ஒரு தந்தையின் தியாகம் இருக்கிறது, ஒரு தாயின் பொறுப்பு இருக்கிறது. அந்த வியர்வைக்கு உரிய பாதுகாப்பையும் கௌரவமான வேலைச் சூழலையும் பெற்றுக் கொடுப்பதில் தூதுவர் காலித் பின் அல்கஹ்தானி காட்டும் அக்கறை, அவர் நம் மக்கள் மீது வைத்துள்ள நேசத்தைக் காட்டுகிறது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை சவூதி அரேபியா என்பது ஆன்மீகத்தின் ஆணிவேர். ஹஜ் அல்லது உம்ரா புனிதப் பயணத்தை எளிதாக்கி, மத உணர்வுகளை மிகவும் கண்ணியமாக மதித்து நடக்கும் அவரது அணுகுமுறை, பலரின் பிரார்த்தனைகளில் அவருக்கு ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களுடனும் அவர் காட்டும் சகோதரத்துவ அணுகுமுறை, அவரை ஒரு உண்மையான மதநல்லிணக்கத் தூதராகவே நமக்குக் காட்டுகிறது. ஒரு தூதுவரின் வெற்றி அவர் எத்தனை திட்டங்களில் கையெழுத்திடுகிறார் என்பதையும் தாண்டி அவர் எத்தனை மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார் என்பதில்தான் இருக்கிறது என நினைக்கிறேன். அந்த வகையில், மேதகு காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் சவூதி அரேபியாவின் தூதுவராக மட்டுமன்றி, இலங்கை மக்களின் நேசத்திற்குரிய உறவினராகவே மாறிவிட்டார்.
இத்தனை அளப்பரிய உதவிகளையும், சகோதரத்துவத்தையும் தொடர்ந்து வழங்கி வரும் இரு புனித ஸ்தலங்களின் சேவகர்களான சவூதி அரேபிய மன்னர் மேதகு சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்களுக்கும், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களுக்கும் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கும் ஒரு சாதாரண இலங்கையனாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேதகு தூதுவர் காலித் பின் அல்கஹ்தானியின் இந்த மனிதநேயப் பயணமும் அவரது இலங்கைக்கான சேவைக்காலமும் நீடிக்கவும் அவரது நற்பணிகளை வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்ளவும் பிரார்தித்துக் கொள்கிறேன்.
Add comment