இரு புனித ஸ்தலங்களின் சேவகரின் விருந்தினர்கள் திட்டத்தின் கீழ் இது வரை உலகலாவிய ரீதியில் சுமார் 65 ஆயிரம் பேர் இலவசமாக புனித ஹஜ் மற்றும் உம்ராக்கடமை களை நிறை வேற்றியுள்ளனர்.
✍️ அஸ்ஹர் ஆதம்
சஊதி அரேபிய மன்னரும் இரு புனித பள்ளிவாயல்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சுஊத் மற்றும் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சுஊத் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சஊதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சு இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது.
உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க ஆளுமைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வருடா வருடம் சஊதி அரேபியாவுக்கு வரவழைத்து ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறை வேற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இவர்களின் பயணம், தங்குமிடம் மற்றும் புனிதப் பயணம் தொடர்பான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதற்காக மன்னர் ஒவ்வொரு ஆண்டும் அரச ஆணைகளை வெளியிடுகிறார். இதற்காக அனைத்து செலவுகளையும் சஊதி அரேபிய மன்னரே தனது தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்குகின்றார்.
இத்திட்டம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 140 நாடுகளைச் சேர்ந்த சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இத்திட்டத்தின் மூலம் இது வரையில் பயனடைந்துள்ளனர். புனித மக்காவில் உள்ள புனித ஹரம் ஷரீப் மற்றும் மதீனாவில் மஸ்ஜிதுந்நபவிக்கு அருகாமையிலுமுள்ள அதி நவீன நட்சத்திர ஹோட்டல்களில் இவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர்.புனித மக்கா மற்றும் புனித மதீனா ஆகிய புனித பூமிகளுக்கு இராஜ மரியாதையுடன் அழைத்துச் செல்லப்படும் இவர்கள் புனித ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்கு மேலதிகமாக இரு புனித பள்ளிவாயல்களின் முக்கிய இமாம்களுடன் சந்திப்பில் ஈடுபடுவர். அத்துடன் உஹத் போர் இடம் பெற்ற இடம் ரெளழா ஷரீப் மஸ்ஜிதுந்நபவியில் அதன் அருகாமையில் உள்ள மியூசியம் மற்றும் மன்னர் பஹ்த் அல்குர்ஆன் பதிப்பகம் மற்றும் கிஸ்வா உற்பத்தித் தொழிற்சாலை போன்ற மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் இவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
இந்த வகையில் இவ்வாண்டின் 4 ஆவதும் இறுதியுமான குழு அடுத்தவாரமளவில் சஊதி அரேபியா செல்லவுள்ளது.பல நாடுகளிலிருந்தும் செல்லவுள்ள இக்குழுவில் 250 பேர் அடங்குகின்றனர். இதில் இலங்கையிலிருந்தும் 10 பேருக்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இவர்களுக்கான ஆவனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று கொழும்பிலுள்ள சஊதி அரேபிய தூதரகத்தில் இடம் பெற்றது.இவர்களுக்கான சந்தர்ப்பத்த்தை ஏற்படுத்திக்கொடுத்த இலங்கைக்கான சஊதி அரேபியாவின் முன்னாள் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கும் பதில் தூதுவர் நாஸர் அப்துல் ரஹ்மான் அல் ஹாஸிமி ஆகியோருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
Add comment