✍️ ஏ. எம் அபான்
“சில விடயங்களில் எமக்குள் கருத்து வேறுபாடுகள் அல்லது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சிக்கல்கள் நிலைமை இருக்கலாம். அது ஞாயம் தான் ஆனால் அதற்காக சவூதி அரேபியா செய்கின்ற அனைத்து சேவைகளையும் மறைத்து அவர்களை எல்லாவற்றிலும் கேலிக்கைக்கு உற்படுத்துவது என்பது எமக்குள் இருக்கின்ற ஒரு நோயாகவே பார்க்க வேண்டி இருக்கிறது”
ஹஜ் மற்றும் உம்ரா ஆகியவை சாதாரணப் பயணங்கள் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் அனுபவிக்கத் துடிக்கும், நம்பிக்கையும் நெகிழ்ச்சியும் கலந்த ஓர் உன்னத ஆன்மீகப் பயணம் அது. உலகின் நாலா திசைகளிலிருந்தும், பல்வேறு மொழிகள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து, பல இலட்சக்கணக்கான மக்கள் ஒரே மையத்தில் சங்கமிக்கும் அந்தத் தருணம் மெய்சிலிர்க்க வைக்கும் ஓர் அற்புதமாகும். இறைவனின் இல்லத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் ஒரு மனிதனின் நெஞ்சில் எழும்போதே கண்களில் கண்ணீர் வெளியே எட்டிப்பார்கிறது.
மதீனாவின் மண்ணிலும் மக்காவின் வீதிகளிலும் அந்த ஆன்மீக உணர்ச்சியை பார்க்கையில், அத்தகைய பல இலட்சம் மனிதர்களின் உணர்வுகளையும் கனவுகளையும் சுமந்து வரும் இந்த மாபெரும் பயணத்தை, சவூதி அரேபியா எவ்வாறு கையாள்கிறது என்பதை எண்ணி என் உள்ளம் பிரமித்துப் போகிறது.
தூரத்திலிருந்து நோக்குபவர்களுக்கு இச்செயற்பாடு ஒரு சாதாரண நிகழ்வாக மிக இலகுவான ஒன்றாகவும் தோன்றலாம். ஆனால், இது உலகிலேயே மிகச் சவாலான, கடினமான பொறுப்பாகும் என்பதை உறுதியாகக் கூறுவேன். ஏனெனில் ஹஜ் காலத்தில் மாத்திரம் சுமார் இரண்டு முதல் மூன்று மில்லியன் வரையான ஹாஜிகளும், ஆண்டு முழுவதும் நடைபெறும் உம்ராவிற்காக ஒரு கோடிக்கும் அதிகமானோரும் வருகை தரும் நிலையில், அவர்களை எவ்விதச் சிறு இடையூறும் இன்றிப் பாதுகாப்பாக நிர்வகிக்கும் இச்சவாலை சவூதி அரேபியா வெறுமனே ஒரு அரசாங்கத்தின் கடமையாகக் கருதாமல், இறைவிருந்தினர்களுக்குச் செய்யும் மாபெரும் பாக்கியமாகவும், ஒரு தாயின் பரிவோடும் உளப்பூர்வமாகச் செய்து வருகின்றது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.
இன்று மஸ்ஜிதுல் ஹராமின் பிரம்மாண்ட விரிவாக்கம், மினாவில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கூடாரங்கள், பல அடுக்குகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜமராத் பாலங்கள், மக்கா-மதீனா அதிவேக ரயில் சேவை ஆகியவையெல்லாம் ஆடம்பரத்திற்காக உருவாக்கப்பட்டவையல்ல. மாறாக, யாத்திரிகர்களின் உயிரைப் பாதுகாக்கவும், அவர்கள் எவ்வித சிரமமுமின்றித் தமது வணக்கவழிபாடுகளை நிறைவேற்றவும் உருவாக்கப்பட்ட அத்தியாவசியக் கட்டமைப்புகளாகும். தற்போது ஸ்மார்ட் கார்டுகள், வழிகாட்டும் செயலிகள் (Apps) மற்றும் கூட்ட நெரிசலைக் கண்காணிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் எனப் பல நவீன வசதிகளை இணைத்து, பல நூற்றாண்டுகள் பழமையான இந்த ஆன்மீகப் பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளனர்.
‘சவூதி விஷன் 2030’ திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு மூன்று கோடி உம்ரா யாத்திரிகர்களை வரவேற்கும் இலக்கோடு பல பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. யாத்திரிகர்களின் பயணத்தை மேலும் இலகுபடுத்துவதற்காகச் சவூதி அரேபியா மிக அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள அதிநவீன சேவைகள் என்னை மென்மேலும் வியப்பில் ஆழ்த்துகின்றன. ‘மக்கா ரூட்’ (Makkah Route Initiative) திட்டத்தின் மூலம் யாத்திரிகர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே குடிவரவு (Immigration) நடைமுறைகளை முடித்துக்கொண்டு, ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளுக்கென பிரத்தியேகமாகச் செயற்படும் மாபெரும் விமான நிலைய பிரத்தியேக பிரிவுகளில் வந்தடைகின்றனர். விமான நிலையத்திலிருந்து அவர்களது உடமைகள் நேரடியாக அவர்கள் தங்கும் விடுதிகளுக்கே கொண்டு செல்லப்படுவதால் பயணக் களைப்பு பெருமளவு குறைக்கப்படுகிறது.
அத்தோடு நின்றுவிடாமல் யாத்திரிகர்களின் வசதிக்காக மக்காவிற்கு சர்வதேச விமான நிலையம் ஒன்றும் வர இருப்பதாக ஒரு உத்தியோகபூர்வ செய்தியையும் அன்மையில் வாசித்தேன். அத்துடன், ‘நுசுக்’ (Nusuk) செயலி மூலம் யாத்திரிகர்கள் தங்களின் முழுப் பயணத்தையும் டிஜிட்டல் முறையில் திட்டமிடுவதுடன், மஸ்ஜிதுல் ஹராமிற்குள் பல மொழிகளில் மார்க்க விளக்கங்களை வழங்குவதற்கும், ஸம்ஸம் நீரை விநியோகிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஸ்மார்ட் ரோபோக்கள் (Smart Robots) களமிறக்கப்பட்டுள்ளன. உண்மையில் இந்த ஏற்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றது. கொளுத்தும் வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காகப் பாதசாரிகள் செல்லும் வீதிகளில் வெப்பத்தைக் குறைக்கும் விசேட தொழில்நுட்பங்கள் (Cooling pavements) பயன்படுத்தப்படுவதுடன், அவசர மருத்துவத் தேவைகளுக்காகவும், உயிர்காக்கும் உபகரணங்களை விரைவாகக் கொண்டு செல்லவும் ‘பறக்கும் டாக்சிகள்’ (Flying Taxis) மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களும் கூட தற்போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் தொழில்நுட்ப வசதிகளையெல்லாம் தாண்டி, அங்கு சேவையாற்றுபவர்களிடம் நான் காணும் மனிதநேயமே என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. கொளுத்தும் வெயிலில், வீதிகளில் தளர்ந்து நடக்கும் முதியவர்களையும் நோயாளிகளையும், அங்கு கடமையாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களின் சொந்தப் பெற்றோரைப் போலத் தோளில் சுமந்து செல்வதையும், தாகத்தால் வாடும் யாத்திரிகர்களின் தலைகளில் குளிர்ந்த நீரை ஊற்றி ஆற்றுப்படுத்துவதையும் காணும்போது, அங்கு அதிகாரத்தைக் கடந்து மனிதநேயமே மகுடம் சூடி நிற்பதை உணரலாம்.
மருத்துவத் துறையில் சவூதி அரேபியா செய்யும் அர்ப்பணிப்பு அளப்பரியது. தங்களின் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சேமிப்போடும் கனவுகளோடும் வரும் ஒருவர் அங்கு திடீர் மாரடைப்பிற்கு உள்ளானாலோ அல்லது வேறேதேனும் தீவிர நோய்நிலைமைக்கு சென்றாலோ அவருக்கு உடனடியாக உலகின் அதிநவீன திறந்த இதய அறுவை சிகிச்சையையோ, அல்லது சிறுநீரக மாற்றுத் தேவையானால் பல ஆயிரம் டயாலிசிஸ் சிகிச்சைகளையோ எந்தவொரு கட்டணமுமின்றி சவூதி அரசு எந்த பாகுபாடும் இல்லாமல் வழங்கி வருகின்றது. இது வெறுமனே ஒரு மருத்துவச் சேவை அல்ல; பல உயிர்களைக் காத்து அவர்களின் குடும்பங்களில் ஒளியேற்றும் உன்னத அறப்பணியாகும் .அதேபோன்று, இரவும் பகலுமாக இலட்சக்கணக்கான மக்கள் கூடும் மஸ்ஜிதுல் ஹராமை, தினமும் பத்து முறைக்கு மேல், சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு ஒரு சிறு தூசு கூட இன்றித் துப்புரவு செய்கின்றனர். தினமும் பல மில்லியன் லிட்டர் குளிர்ந்த ஸம்ஸம் நீரை வழங்கி இறைவிருந்தினர்களின் தாகத்தைத் தணிக்கின்றனர்.
எனவே, இந்தச் சேவை மிக இலகுவானது என்று கருதுபவர்கள், இந்தப் பிரம்மாண்டமான முகாமைத்துவத்தின் பின்னணியில் எத்தனை பேரின் தூக்கமற்ற இரவுகளும், சிந்தப்பட்ட வியர்வைத் துளிகளும் அடங்கியுள்ளன என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் குறைதேடிக்கொண்டும், ஏசிக்கொண்டும் இருப்பதைக் கைவிட்டுவிட்டு, இத்தகைய நல்ல விடயங்களையும் மகத்தான அர்ப்பணிப்புகளையும் நாம் மனதாரப் போற்றப் பழக வேண்டும். சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் அல்லது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சிக்கல்கள் நிலைமை இருக்கலாம். அது ஞாயம் தான் ஆனால் அதற்காக சவூதி அரேபியா செய்கின்ற அனைத்து சேவைகளையும் மறைத்து அவர்களை எல்லாவற்றிலும் கேலிக்கைக்கு உற்படுத்துவது என்பது எமக்குல் இருக்கின்ற ஒரு நோயாகவே பார்க்க வேண்டி இருக்கிறது .
ஒரு யாத்திரிகர் எவ்விதச் சிரமுமின்றி, அமைதியாக “லப்பைக் அல்லாஹும்மா லப்பைக்” என்று முழங்கும் அந்த நொடியில், அவருக்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கானோரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. ஹஜ் மற்றும் உம்ரா என்பது வெறும் நிகழ்வல்ல; அது உலக முஸ்லிம்களின் இதயங்களை ஒன்றிணைக்கும் ஓர் உயிருள்ள ஆன்மீக அனுபவமாகும்.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்களுக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வரும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவூத் மற்றும் இந்த ஏற்பாடுகளில் இரவு பகலாக உழைக்கும் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்கூலியை வழங்குவானாக!அவர்களின் இந்த அரும்பணி எவ்வித இடையூறுமின்றி சிறப்பாகத் தொடரவும், புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் அனைவருக்கும் அமைதியும், ஆரோக்கியமும், இறைவனின் முழுமையான பாதுகாப்பும் கிடைக்கப் பிரார்த்திப்போம். ஆமீன்!
Add comment