புத்தளம் பெருநாள் குத்பா: சவுதி அரேபியாவை நோக்கிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்க முடியாதவை.
1447 ஹிஜ்ரி ஆண்டு ஈதுல் ஃபித்ர் பெருநாள் குத்பாவில், புத்தளம் பகுதியில் உள்ள ஒருவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், முற்றிலும் முதிர்ச்சியற்றதும் பொறுப்பற்றதுமான அணுகுமுறையைக் காட்டுகின்றன. குறிப்பாக, சவுதி அரேபியாவை எதிர்த்து ஆதாரமற்ற, கடுமையான மற்றும் தீவிரமான குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குத்பா மேடையின் புனிதத்திற்கும், பெருநாள் தினத்தின் மகத்துவத்திற்கும் முற்றிலும் ஒவ்வாததுமாகும்.
ஈதுல் பித்ர் பெருநாள் குத்பா போன்ற மிக உயர்ந்த மேடையில் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்க முடியாததும், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுமான செயலாகும்.மேலும், இவ்வாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தவறான புரிதலின் விளைவாகும்; தன் எண்ணங்களைப் பொதுமக்களின் எண்ணங்களாகக் கருதி, ஒரு மகத்தான நாட்டின் மதிப்பையும் கௌரவத்தையும் தவறாக சித்தரிக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது. உண்மையில், இத்தகைய மேடைகள் மிகப் பெரிய பொறுப்பாகும்; அவை ஞானம், சமநிலை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை வேண்டி நிற்கின்றன. அவை உணர்ச்சிகளுக்கோ அல்லது பிளவை ஏற்படுத்துவதற்கோ பேசுவதற்கான இடமல்ல.
சவுதி அரேபியா, புனித தீனூல் இஸ்லாம், உலக முஸ்லிம்கள் மட்டுமின்றி, மனிதகுலம் முழுவதற்கும் அளித்து வரும் சேவைகள் மறுக்க முடியாதவை. குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகளுக்கும் பல தசாப்தங்களாக தொடர்ந்து வழங்கி வரும் உதவிகள் மிக முக்கியமானவை. உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும், மோதல்களைத் தவிர்ப்பதிலும் அது முக்கிய பங்காற்றி வருகிறது. இரு புனித ஹரம்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்நாடு, அறிவார்ந்த, தூரநோக்குள்ள தலைமையும், கருணைமிக்க மக்களும் வாழும் நாடாகும். அரபு மற்றும் இஸ்லாமிய உலகிலும், சர்வதேச அளவிலும் உயர்ந்த மரியாதையைக் கொண்ட நாடாகும். மத்திய கிழக்கு அரபு நாடுகள் உட்பட அரபு இஸ்லாமிய நாடுகள் சவுதி அரேபியாவை தங்களுடைய முதன்மை நாடாகவே நோக்குகிறது. இதனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அதை குறிவைப்பது மிகவும் ஆபத்தானதும், ஒழுக்க ரீதியாகவும் மத ரீதியாகவும் ஏற்க முடியாததுமானதாகும்.
சவுதி அரேபியா நிதானமாக செயற்பட்டு தன்னுடைய தலைமையில் ஏனைய அரபு இஸ்லாமிய நாடுகளை வழிநடத்துவதால் தான் மத்திய கிழக்கில் இரத்தம் ஓடுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதைக்குழப்ப இக்கவானிகள் செயற்பட்டுக் கொண்டிருக்டின்றனர். எந்த மனிதராலும், எந்த நாடாலும் தவறுகள் நிகழலாம். சவுதி அரேபியாவும் தவறற்ற நாடல்ல. எனினும், இவ்வாறான அநியாயமான அணுகுமுறையில் பொய்யான விடயங்களை முன்வைப்பது உண்மையை மறைக்கும் செயலாகும்.
சவுதி அரேபியா மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளை எதிர்த்து, குறிப்பாக பொது மேடைகளிலும் குத்பாக்களிலும் இவ்வாறான தாக்குதல்களை முன்வைப்பது, குறுகிய சிந்தனையையும் காழ்ப்புணர்ச்சியையும் தவறான மதிப்பீட்டையும் பிரதிபலிக்கிறது. இது சமுதாய ஒற்றுமைக்கும் நன்மைக்கும் உதவுவதில்லை.
எனவே, புத்தளம் பெருநாள் தொழுகை மைதானத்தில் நடைபெற்ற பிரசங்கத்தில் குறித்த நபரால் சவுதி அரேபியாவைப் பற்றி முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் பொறுப்பற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும். இத்தகைய விடயங்களை பொதுமக்கள் முன்னிலையில் பேசுவதற்கான தகுதி இந்தப் பேச்சாளருக்கு இல்லை என்பதை அநேகர் வலியுறுத்துகின்றனர். மேலும், சவுதி அரேபியாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, அவற்றிற்கான முழுப் பொறுப்பும் அதன் விளைவுகளையும் அதை முன்வைத்தவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உரை சவுதி அரேபியாவுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமிடையிலும், சவுதி அரேபியாவுக்கும் இலங்கை இராஜதந்திர உறவுகளுக்குமிடையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.மேலும், இத்தகைய உரைகள் இடம்பெற அனுமதித்துள்ள பிரதேசப் பொறுப்பாளர்களும், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளும், அவரோடு தொடர்புள்ள நிறுவனமும் இதற்கான முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
எனவே தனிப்பட்ட முறையிலும், அல்-ஹிக்மா நிறுவன சார்பிலும்சவுதி அரேபியா சம்பந்தமாக குறித்த நபரால் அப்பிசங்கத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை நாம் கண்டிக்கின்றோம். சவுதி அரேபியாவை நோக்கி முன்வைக்கப்பட்ட இவ்வாறான பொறுப்பற்ற மற்றும் அவதூறு நிறைந்த கருத்துக்களை நிராகரிக்கின்றோம்.
எம். எச். ஷைஹுதீன் மதனி
அல்-ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு.
Add comment